என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களின் வீட்டுக்கு சென்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் சாதி சன்றிதழ் வழங்கினார்.
    X
    மாணவர்களின் வீட்டுக்கு சென்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் சாதி சன்றிதழ் வழங்கினார்.

    இருளர் இன மாணவ-மாணவிகளுக்கு வீடு தேடி சென்று சாதி சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

    கும்பகோணம் அருகே உள்ள இருளர் இன மாணவ&மாணவிகளுக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வீடு தேடி சென்று சாதி சான்றிதழ் வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை மண்டகமேடு புதுத்தெருவில் பழங்குடியின இருளர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். 

    இவர்களது குழந்தைகள் உயர்கல்விப் படிக்க சாதிச் சான்றிதழ் கிடைக்காததால், 10-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை என்றும், அதனால் சாதிச் சான்று வழங்குமாறு 25 ஆண்டுகளாகப் போராடி வந்தனர்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் அப்பகுதி மாணவ&மாணவிகள் மனு அளித்தனர். இதுதொடர்பாக கள ஆய்வு செய்யுமாறு கல்வித்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஆய்வு செய்த கல்வித் துறை அலுவலர்கள், அப்பகுதி மாணவ&மாணவிகள் ஜாதிச்சான்றிதழ் இல்லாததால் உயர் கல்விப் படிக்க முடியவில்லை என கலெக்டரிடம் அறிக்கை அளித்தனர்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தேனாம்படுகை மண்டகமேடு புதுத்தெரு கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்றார். மேலும், பள்ளியில் படிக்கும் 16 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, சாதிச் சான்றிதழை வழங்கினார். 

    அவருக்கு பழங்குடியின மக்களும், மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர். எங்களது 25 ஆண்டுகால பிரச்சினைக்கு உங்கள் மூலம் விடிவு காலம் பிறந்துள்ளது என்று ஆனந்த கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்தனர்.

    அப்போது கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தேனாம்படுகை கிராமம், மண்டகமேடு புதுத்தெருவில் 49 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளுக்கு 25 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இவர்கள் பிற மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்குப் புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்பதால், இவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை.

    தற்போது இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அரியலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிருந்து இவர்களது ரத்த உறவுகள் பெற்ற ஜாதிச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு, தற்போது இருளர் என சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வியைத் தொடர முடியும். இதேபோல, இப்பகுதியில் மீதமுள்ள மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். 

    மேலும், இப்பகுதியில் சில அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டுள்ளனர். அதையும் விரைவில் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, தாசில்தார் தங்க. பிரபாகரன் மற்றும் வருவாய்துறையினர், கல்வி துறையினர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×