search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பேருந்துகள்
    X
    அரசு பேருந்துகள்

    பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு அடுத்த மாதம் 2 நாள் சம்பளம் பிடித்தம்

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் முதல் நாளில் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை.
    சென்னை:

    மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பஸ் தொழிலாளர்கள் கடந்த 28-ந் தேதி ஸ்டிரைக்கில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 29-ந் தேதி பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினார்கள். இதனால் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

    வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று அரசு அறிவித்தது. அதையும் பொருட்படுத்தாமல் தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

    தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பஸ்களை இயக்கினர்.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த மாதத்திற்கான சம்பளம் மார்ச் 20-ந்தேதிக்குள் கணக்கிடப்படுவதால் அடுத்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    8 அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் பெரும்பாலும் வேலைக்கு சென்றனர்.

    அதனால் அவர்களுக்கு பாதிப்பு இருக்காது எனவும், டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப ஊழியர்கள் தான் பெருமளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு இருப்பதால் அவர்களின் சம்பளம் அடுத்த மாதம் பட்டியலில் பிடித்தம் செய்யப்படும் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளும் வருகைப் பதிவேட்டினை பின்பற்றி சம்பளம் பிடித்த நடவடிக்கையை எடுக்க உள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சம் பஸ் தொழிலாளர்கள் மீது சம்பளம் பிடித்த நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் முதல் நாளில் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. 2-வது நாளில் 26 சதவீதத்தினர் பணியில் ஈடுபடவில்லை. அதன் அடிப்படையில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் மீது சம்பள பிடித்த நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து சென்னை மாநகர பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது, ‘‘சென்னையில் முதல் நாள் வேலை நிறுத்தத்தில் 90 சதவீதம் பேரும், 2-வது நாள் ஸ்டிரைக்கில் 26 சதவீதம் பேரும் ஈடுபட்டனர்.

    தொழிலாளர்கள் பணிக்கு வந்த விவரங்கள், வராதவர்களின் பட்டியல் 32 கிளைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. அரசின் உத்தரவை பின்பற்றி வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்ற அடிப்படையில் சம்பள பிடித்த நடவடிக்கை ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×