என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்- 150 பேர் கைது
கடலூர்:
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை விற்பனையை கைவிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலைநிறுத்த மற்றும் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர்சந்தை பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டனர். பின்னர் தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பையன், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாதவன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் குளோப் ஆகியோர் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் பழனிவேல், ராஜகோபால், எத்திராஜ், ஆளவந்தார், பாபு, சுப்புராயன், சாந்தகுமாரி, அனந்தநாராயணன், ஸ்டாலின், பஞ்சாட்சரம், வைத்திலிங்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக கடலூர் அண்ணா பாலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென்று சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் செல்லாததால் 150 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.






