என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல்-கிளீனர் பலி
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் கிளீனர் பலியானார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரில் இருந்து ஓசூர் நோக்கி ஜல்லி கலவை எந்திர லாரி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதே போல கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருச்சி லால்குடியை சேர்ந்த முருகேசன் (53) என்பவர் ஓட்டினார். கிளீனராக அதே ஊரை சேர்ந்த ஆல்பர்ட் (25) என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்ற இடம் அருகில் லாரி சென்ற போது பின்னால் சென்ற சொகுசு பஸ் லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் கிளீனர் ஆல்பர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த தேவக்கோட்டை காமராஜ் (33), பெங்களூரு கே.ஆர்.புரம் செல்லதுரை (53), ஊட்டி பச்சிராஜ் (57), புதுக்கோட்டை சுரேஷ் (42), திருச்சி ஹரி (20) உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் பலியான ஆல்பர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






