search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலங்காநல்லூர் அருகே சிதிலமடைந்த ஆதிநாராயண பெருமாள் கற்கோவில்.
    X
    அலங்காநல்லூர் அருகே சிதிலமடைந்த ஆதிநாராயண பெருமாள் கற்கோவில்.

    அலங்காநல்லூர் அருகே 1000 ஆண்டு பழமையான பாண்டியர் கால கற்கோவில்- வரலாற்று பேராசிரியர்கள் ஆய்வு

    300 ஆண்டுகளுக்கு முன் அழகர்கோவில் கள்ளழகர் அலங்காநல்லூர் வழியாக சென்று தேனூர் வைகை ஆற்றில் இறங்குவார் என கூறப்படுகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராம எல்லைக்கு உட்பட்ட முல்லை பெரியாறு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது நாராயண பெருமாள் கோவில் ஆகும்.

    பழமை வாய்ந்த கருங்கற்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக அங்கே இருக்கும் கற்சிலைகள் தெரிவிக்கின்றன.

    4 மண்டபங்களாக அமையப் பெற்றுள்ள இந்த கற்கோட்டை கோவிலானது முன்மண்டபத்தில் ஆஞ்ச நேயர், கருடாழ்வார் வரவேற்க கருவறையில் ஆதிநாராயண பெருமாள் அமர்ந்து அருள் பாலிப்பதாக கோவிலில் உள்ள சிலைகளும் கல்வெட்டும் தெரிவிக்கிறது.

    இதுகுறித்து மதுரை திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் ராஜகோபால், பிரையா ஆகியோர் இந்த கோவிலை கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவிலின் அமைப்பு பழங்கால தமிழர்கள் அறிவியல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், முற் காலத்தில் கோவிலில் மருத்துவங்கள் செய்யப்படுவதாகும் இந்த கோவிலில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் சிலைகளும் தெரிவிக்கின்றன.

    இங்குள்ள கல் தூணில் அமையப்பெற்றுள்ள மீன் மற்றும் சாட்டை வடிவிலான சிற்பம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் என்பது உறுதியாகிறது. கோவில் அமையப் பெற்றுள்ள இடம் மலை அடிவாரத்தில் உள்ளதால் அங்கிருந்து மூலிகைகளை பறித்துவந்து கோவில் முன்புள்ள கல் உரலில் அரைத்து மருத்துவம் செய்யப்பட்டதாகவும் சிற்பங்களும், சிலைகளும் தெரிவிக்கின்றன.

    கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம் பார்ப்பது, பெண்ணின் வயிற்றில் கரு உருவாவது முதல் குழந்தை பிறப்பது வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர் என்பதை அந்த சிற்பங்கள் எடுத்து கூறுகின்றன.

    மேலும் சிலைகள், சிற்பங்கள் தமிழ்முறை மருத்துவத்தை அடையாளமாக கொண்டுள்ளது. இந்த கோவில் 4 மண்டலங்களாக அமையப்பெற்று கருவறை கோவில் உள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஜன்னல் முதற்கொண்டு கற்களால் கட்டப்பட்டுள்ளது.

    சிலைகளை பார்க்கும் போது முற்காலப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு நாயக்கர்கள் காலத்தில் சிலை அமைத்து பூஜைகள் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் சிலைகளின் நிறங்கள் தெரிவிக்கிறது. கோவிலைச் சுற்றிலும் வயல்வெளிகள் அமைந்துள்ளதால் சுமார் 10 அடிகளுக்கு மேல் கோவில் பூமிக்குள் புதைந்து உள்ளது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக கருவறை பகுதிகள் இடிந்து காணப்படுகிறது.

    300 ஆண்டுகளுக்கு முன் அழகர்கோவில் கள்ளழகர் அலங்காநல்லூர் வழியாக சென்று தேனூர் வைகை ஆற்றில் இறங்குவார் என கூறப்படுகிறது. அப்படி வரும் போது இந்தக் கோவிலுக்கும் வந்து செல்வார் என முன்னோர்கள் தெரிவித்தனர்.

    இந்த கோவிலில் அதிகளவில் பழமை வாய்ந்த சிலைகள் இருந்ததாகவும் 30 ஆண்டுகளுக்கு முன் பல சிலைகள் திருடு போய் விட்டதாகவும் இந்த பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். பாதுகாப்பின்றி காணப்படும் பழமை வாய்ந்த ஆதிநாராயண பெருமாள் கோவில் சீரமைக்கப்பட்டு தமிழர்களின் மரபு பாதுகாக்கப்பட வேண்டும். தொல்லியல் துறை இந்த கோவிலை முழுமையாக ஆராய்ச்சி செய்து புனரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த கோவிலின் முன்புள்ள கம்பத்தடி கருப்பணசுவாமி கோவிலை இன்றளவும் கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் வைத்து படையலிட்டு தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலூர் கிராமத்தில் திருவிழா நடந்தால் முதல் நிகழ்ச்சியாக இந்த கோவிலுக்கு வருகை தந்து கம்பத்தடி கருப்பணை வணங்கி சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கிய பின்னரே கோவில் திருவிழா தொடங்குவதாக இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

    பழமை வாய்ந்த அறிவியல் சார்ந்த இந்த கோவிலை தமிழக அரசின் அறநிலையத்துறை சீரமைத்து மக்களின் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×