என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்த காட்சி.
    X
    மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்த காட்சி.

    நிதி இல்லாததால் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் நிறுத்தி வைப்பு

    நிதி இல்லாததால் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    காட்பாடி சில்க் மில் அருகே உள்ள பூங்காவில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொடக்க விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன்  மரக்கன்றுகளை நட்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி தேர்தல் நடைபெறாததால் காட்டு ராஜா ஆட்சி போல நடந்து வந்தது. எவ்வளவு பணம் வருவாய் வந்தது எவ்வளவு செலவு செய்தார்கள் என கணக்கு தெரியாது. விருதம்பட்டு அருகே உள்ள சர்க்கார் தோப்பு பகுதியில் ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ததாக கூறுகின்றனர்.

    அதில் எவ்வளவு அடித்தார்கள் என விசாரணை கமிஷன் அமைத்து யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம். துரைமுருகன் தொகுதியில் வேலை செய்வதாக அதிகாரிகள் கருதவேண்டும் கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தால் விவசாய பணிக்கு ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நகர்ப்புற வேலை திட்டத்தில் இதுவரை மாநகராட்சி பகுதியில் 4,500 பேர் தேர்வு செய்துள்ளனர். 

    கமிஷனர் முதல் அதிகாரிகள் வரை நல்ல முறையில் வேலை செய்தால் அவர்களை உச்சிமுகர்ந்து விடுவேன். அப்படி இல்லை என்றால் அதிகாரிகளை தூக்கவும் தயங்கமாட்டேன். சில்க் மில் அருகே உள்ள சமுதாய கூடத்தை தனி ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார். 

    அவரிடமிருந்து சமுதாயக் கூடத்தை மீட்டு சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இதேபோல் பூங்காவில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். 

    பொதுமக்கள் நடைப் பயிற்சி செய்வதற்கு வயதில் வசதி செய்து தரவேண்டும். வேலூர் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 

    மழைக்காலங்களில் பாதி பேர் காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர்.உடனடியாக அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் அனைவரும் தங்களது வார்டு தினமும் சுற்றிப்பார்த்து குறைகளை கேட்டறிய வேண்டும். 

    வார்டுகளுக்கு என்ன தேவை என்பதை என்னிடம் தெரிவித்தால் அதற்கு உண்டான நிதியை வாங்கித் தர தயாராக இருக்கிறேன். விரைவில் பொன்னையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட ஆஸ்பத்திரி அமைத்து தரப்படும். 

    இந்த 5 வருட காலத்தில் காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்சாலை ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து  நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் மாற்று இடம் தருமாறு கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தவாடி என்ற இடத்தில் விரைவில் தடுப்பணை அமைக்கப்படும். கோதாவரி- காவிரி ஆறு இணைப்பு, தென்பெண்ணை செய்யாறு இணைப்பு, தாமிரபரணி கருமேனியாறு இணைப்பு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது. 

    தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் நிதி இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். 
    Next Story
    ×