search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எழும்பூர் ரெயில் நிலையம்
    X
    எழும்பூர் ரெயில் நிலையம்

    ரூ.400 கோடி செலவில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதிகள்

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.400 கோடி செலவில் பயணிகளுக்காக பல்வேறு புதிய வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் 750 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகள் 1, 2, 3 குறைந்த நீளம் கொண்டது. இவை சிறிய ரக ரெயில்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான 4-ம் நடைமேடை எழும்பூர் ரெயில் நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5, 6, 7-ம் நடைமேடைகள் நீள ரக ரெயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2-வது நுழைவுவாயில் ரூ.115.3 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2006ம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது.

    தினமும் 35 முக்கிய வழித்தடங்களுக்கு ரெயில்கள் மற்றும் 118 புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், தங்கும் விடுதி என பல வசதிகள் இங்கு உள்ளன.

    சென்னை மாநகரின் முக்கிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது. இந்நிலையம், இந்தோ சாராசனிக் பாணியில் கட்டப்பட்டது. 1905-ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கப்பட்டு, 1908-ம் ஆண்டு, ஜூன், 11- ந்தேதி திறக்கப்பட்டது.

    இந்த ரெயில் நிலையம் பல்வேறு காலக்கட்டங்களில் தேவையான வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது, 11 நடை மேடைகளுடன் இயங்கி வருகிறது. கொரோனா தாக்கத்துக்கு பின், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 28 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையம் வழியாக 23 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையத்தில் உள்ள புறநகர் மின்சார ரெயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.400 கோடியில் நவீன படுத்தப்பட உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் நிலை மாறாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் அதே வடிவில் நவீன தொழில் நுட்ப வல்லுனர்களால் புதுப்பிக்கப்பட உள்ளது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ஓய்வறைகள் வசதி அதிகரிக்கப்பட உள்ளது. நடைமேடைகள் புதுப்பித்து அமைக்கப்பட உள்ளன. பயணிகள் நடை மேம்பாலங்களின் தரம் உயர்த்தப்பட உள்ளன. புதிதாக லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டுவசதி நடைமேடையின் இருபகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன.

    மோட்டார் சைக்கிள், கார்கள் நிறுத்துவதற்காக அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது. ரெயில் நிலைய பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள், வடிகால் வசதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. தண்ணீர் தேவைகளுக்கு புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

    பூந்தமல்லி நெடுஞ்சாலை நுழைவு வாயில் பகுதியில், தேவையான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது., நுழைவு வாயிலும், வரவேற்பு வளைவும் புதிதாக அமைக்கப்பட உள்ளன. பார்சல் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்களும் கட் டப்பட உள்ளன. இந்த புதிய திட்டபணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. 2 ஆண்டுகளில் அனைத்து பணிகளும் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


    Next Story
    ×