search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்ரோ ரெயில் பாதை பணி
    X
    மெட்ரோ ரெயில் பாதை பணி

    48 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது

    மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. எனவே 2025-ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் 118.9 கி.மீ நீளத்தில் 3 வழித்தடங்களுடன் ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2020-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    மாதவரம்-சிப்காட் இடையே 48 கி.மீ நீளம் அமைய உள்ள திட்டத்தில் 30 சுரங்கப்பாதைகள் உள்பட 50 மெட்ரோ ரெயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே 26.10 கி.மீ. நீளத்தில் அமைய உள்ள திட்டத்தில் 18 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்பட 30 ரெயில் நிலையங்களும், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ. நீளத்தில் அமைய உள்ள திட்டத்தில் 42 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்பட 48 ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

    இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. எனவே 2025-ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம், கூட்ரோடு, காமராஜ் கார்டன் தெரு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை மற்றும் எல்காட் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    இந்த ரெயில் மூலம் அந்த பகுதி பொதுமக்கள் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், கோயம்பேடு பஸ் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியும். இந்த 3 வழித்தட பணிகளும் முடிவடைந்தால் சென்னையில் 173 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் தினமும் 25 லட்சம் பேர் அதில் பயணம் செய்வார்கள்.


    Next Story
    ×