என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான கீதா.
    X
    கைதான கீதா.

    கொடூர தாயிடம் சிக்கி தினமும் சித்ரவதைகள் அனுபவித்த பச்சிளம் குழந்தை

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணித்து தீர்த்துக்கட்டிய கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(40). இவரது மனைவி கீதா(வயது38). இவர்களுக்கு நித்தீஷ்(3), நித்தின்(1) என 2 மகன்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கார்த்திக் மூத்த மகன் நித்தீசுடன் கோவையிலும், கீதா 2-வது மகனுடன் ஊட்டியிலும் வசித்து வந்தனர்.

    கடந்த மாதம் 14-ந் தேதி குழந்தை நித்தின் திடீரென்று மயங்கி விழுந்தது. உடனே அந்த குழந்தையை கீதா ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வெளிப்புற காயங்கள் இல்லை என்பதும், கீதா குழந்தையை சரியாக பராமரிக்காததும் போலீசாருக்கு தெரியவந்தது.

    எனவே குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கினர். இதனை அறிந்து கொள்ள உடற்கூறு ஆய்வுக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கை ஊட்டி போலீசாருக்கு கிடைத்தது. அதில் குழந்தை அடித்து கொல்லப்பட்டதும், குழந்தையின் உணவுக்குழாய் பகுதியில் கிழங்குகள், அரிசி உள்ளிட்டவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கீதாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது மகனை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நெஞ்சை பதறவைக்கும் திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்தன.

    கீதா ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்தவர். அந்த திருமண வாழ்க்கையில் மனகசப்பு ஏற்படவே அவர்கள் 2 பேரையும் பிரிந்து தனியாக வாழ்ந்தார்.

    அந்த சமயம் தான் சமூக வலைதளம் மூலம் கார்த்திக்கின் அறிமுகம் கிடைக்க அவருடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நன்றாக சென்ற இவர்களது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது.

    அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட இருவரும் பரஸ்பரம் பேசி பிரிவது என முடிவு செய்தனர். அதன்படி தற்போது இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.

    கார்த்திக் பிரிந்து சென்ற பிறகு, 2-வது மகன் நித்தினுடன் கீதா தனியாக இருந்தார். கணவரின் பிரிவுக்கு பிறகு கீதாவுக்கு பல நபர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

    சிலர் வீட்டிற்கு வருவதும், சிலர் வெளியிடங்களுக்கும் அவரை அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அவரது உல்லாச வாழக்கைக்கு வில்லன் போல அவரது 1 வயது குழந்தை இருந்ததால் அவன் மீது கீதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

    வெறுப்பின் உச்சம் பெற்ற பிள்ளையையே கொலை செய்ய வைக்கும் அளவுக்கு மாறியது. குழந்தையை கொலை செய்ய வேண்டும். ஆனால் போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக யோசித்தார்.

    அதன்பின்னர் தான் கீதா, தனது குழந்தையை கொடுமைப்படுத்த தொடங்கினார். அவரை தினந்தோறும் அடித்து துன்புறுத்தினார்.

    சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுக்காமல் அரிசியை எடுத்து வாயில் போட்டு தண்ணீரை ஊற்றுவது, பச்சை கிழங்கை வாங்கி அதனை குழந்தையின் வாயில் வலுக்கட்டாயமாக திணிப்பது, மது வாங்கி வந்து வாயில் ஊற்றுவது என தினம் தினம் குழந்தையை சித்ரவதை செய்து வந்துள்ளார்.

    கடந்த 14-ந் தேதி வீட்டில் உள்ள தொட்டிலில் நித்தின் தூங்கி கொண்டிருந்தான். இது தான் தக்க சமயம் மகனை கொன்று விட்டு, தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக தெரிவிக்கலாம் என நினைத்தார் கீதா.

    பின்னர் தொட்டிலின் அருகே சென்று குழந்தையை பாசத்தோடு பார்ப்பது போல தொட்டிலை ஆட்டி விட்டார். சிறிது நேரத்தில் தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை தொட்டிலோடு சேர்த்து வேகமாக ஆட்டினார். இதில் குழந்தையின் தலை சுவரில் சென்று மோதியது. இதில் வலி தாங்காமல் குழந்தை சத்தம் போட்டது. ஆனாலும் கல் நெஞ்சம் படைத்த தாய் குழந்தையின் அழுகுரலுக்கு செவிசாய்க்காமல் மீண்டும் குழந்தையை தொட்டிலோடு சேர்த்து தரையில் ஓங்கி அடித்தார்.

    சில நிமிடங்களில் குழந்தை மூச்சு பேச்சின்றி அமைதியாகி விட்டது. குழந்தை இறந்ததை தெரிந்து கொண்ட கீதா, அக்கம் பக்கத்தினரிடம் அதை காட்டி கொள்ளாமல், தனது குழந்தை மூச்சு பேச்சின்றி கிடப்பதாக கூறி அவர்கள் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று நாடகமாடியதும், அதன்பின்னர் தனது கள்ளக்காதலர்களுடன் ஊர், ஊராக ஜாலியாக சுற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×