என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேயர் சுந்தரி ராஜா
பரபரப்பான சூழலில் கடலூரில் நாளை மாநகராட்சி முதல் கூட்டம்- மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடக்கிறது
கடலூர் மாநகராட்சியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பான சூழல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடலூர்:
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் பல கட்ட பிரச்சினைகளுக்கிடையே முதல் பெண் மேயராக தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி ராஜா வெற்றி பெற்று பதவி ஏற்றார். துணை மேயராக தாமரை செல்வன் வெற்றி பெற்று பதவி ஏற்றார். தொடர்ந்து பதவியேற்ற நாள் முதல் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரை செல்வன் கடலூர் மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறிப்பு தினமும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடலூரில் நாளை( 23-ந் தேதி) முதல் மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைசெல்வன் மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் முன்னிலையில் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாநகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற செய்து பதவி ஏற்க செய்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் , நகராட்சி துறை அமைச்சர் நேருவுக்கும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும் கடலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற உள்ளது.
இதற்கிடையே வெற்றி பெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் என்னென்ன விவாதங்கள் செய்யப்போகின்றனர் உள்ளிட்ட பல்வேறு எதிர் பார்ப்புகளுடன் கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் கடலூர் மாநகராட்சியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பான சூழல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கூட்டம் நடைபெற உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
Next Story






