என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறையான அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் தண்ணீர் கம்பெனிக்கு நேற்றிரவு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.
    X
    முறையான அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் தண்ணீர் கம்பெனிக்கு நேற்றிரவு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

    தனியார் தண்ணீர் கம்பெனி ‘சீல்’

    முறையான அனுமதியின்றி இயங்கிய தனியார் தண்ணீர் கம்பெனி பூட்டை உடைத்து அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அருகே பூத்துறை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் கம்பெனிகள் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் அடைத்து விற்பனைக்காக புதுவை, விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

    ஒரு சில தண்ணீர் கம்பெனிகள் பூமியில் இருந்து தண்ணீர் எடுத்து டேங்கர் லாரி மூலம் தனியார் கம்பெனிகளுக்கு சப்ளை செய்து வருகிறது. 

    இந்த நிலையில் பூத்துறை கிராமத்தைச் சுற்றியுள்ள தனியார் தண்ணீர் கம்பெனிகளால் அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

    இதுகுறித்து பூத்துறை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமையில் பூத்துறை கிராம பொதுமக்கள் தனியார் தண்ணீர் கம்பெனிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

    கட்டுப்பாடின்றியும்,  அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தண்ணீரை உறிஞ்சும் தனியார் தண்ணீர் கம்பெனிகளை நிரந்தரமாக மூட வேண்டி மாவட்ட கலெக்டர், வானூர்  தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி, ஒன்றிய தலைவர் ஆகியோர்களுக்கு பூத்துறை கிராம மக்கள் மனுவும் அளித்தனர். 

    இந்த நிலையில் வரு வாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தண்ணீர் கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை.  மேலும் உரிய அனுமதி இன்றி 6 கம்பெனிகள் இயங்கி வருவதை அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில், வானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவக்குமார், நரசிம்மன், தாசில்தார் உமாமகேஸ்வரன், ஆரோவில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் பூத்துறை பஞ்சாயத்துக்குட்பட்ட மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை அருகே உள்ள தண்ணீர் கம்பெனியையும், பூத்துறை பங்களாமேடு பகுதியில் இயங்கி வந்த 2 தண்ணீர் கம்பெனியையும், குரும்பாப்பேட் பின்புறம் அமைந்துள்ள 3 தண்ணீர் கம்பெனி என மொத்தம் ஆறு கம்பெனிக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் வருவதை அறிந்த தண்ணீர் கம்பெனிகள் கம்பெனியை பூட்டிவிட்டு சென்று விட்டனர். 

    ஆனால் அதிகாரிகள் மதிலேறிக் குதித்து உள்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் உள்ள பூட்டை உடைத்து தண்ணீர் கம்பெனிகளுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×