என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே காயமடைந்த மயிலை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காயமடைந்த 2 மயில்கள் மீட்பு
கிருஷ்ணகிரி அருகே காயமடைந்த 2 மயில்கள் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக வனப்பகுதிகளை கொண்ட பகுதியாகும் இங்கு யானை, கரடி, சிறுத்தை, மயில் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளது. இந்த வன உயிரினங்கள் அவ்வப்போது கிராம பகுதிகளுக்கு வரும் பொழுது காயமடைந்து பாதிக்கப் படுகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி அருகே உள்ள பொன்மலைகுட்டை மலை பகுதியில் வழித்தவறி வந்த பெண் மயில் ஒன்று காயமடைந்து பறக்க இயலாமல் இருந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வனத்துறையினர் விரைந்து சென்று காயமடைந்த மயிலை மீட்டு, கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உரிய சிகிச்சை அளித்து வன அலுவலகத்தில் தண்ணீர்,உணவு வழங்கி பாதுகாத்து வருகின்றனர்.
அதே போல் என்.தட்டகல் கிராமத்தில் அடிப்பட்டு காயமடைந்த ஆண் மயிலையும் வனத்துறையினர் மீட்டு உரிய சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி வனச்சரகர் மகேந்திரன் கூறுகையில், கிருஷ்ணகிரி பகுதியில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்துவிட்டது. தற்போது வனப்பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு உணவு தேடி வருகிறது. அவ்வாறு வரும் மயில்களை நாய்கள் துரத்துவதால் அடிப்பட்டு விடுகிறது.
அதன்படி, தற்போது 2 மயில்கள் அடிப்பட்ட தகவல் அறிந்து அவற்றை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின் எங்கள் பாதுகாப்பில் மயில்களை வைத்துள்ளோம். முற்றிலும் காயம் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின், மீண்டும் எந்த பகுதியில் மயில்கள் மீட்கப்பட்டதோ, அந்த பகுதியில் உள்ள வனத்தில் விடப்படும் என்றார்.
Next Story






