என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
புதுக்கோட்டையில் பிரபலம் ஆகாத மதிப்பு கூட்டப்பட்ட மிளகு
மதிப்பு கூட்டப்பட்ட மிளகு உற்பத்தி புதுக்கோட்டையில் பிரபலம் ஆகாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
கேரளா போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் அதிகம் மிளகு பயிரிடப்படுகிறது. இந்த மிளகு செடிக்கு நிழல் முக்கியமானது. தென்னை மற்றும் இதர மரங்களின் இடையே ஊடு பயிராக மிளகு சாகுபடி செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மிளகு உற்பத்திக்கு விவசாயிகள் பிள்ளையார் சுழிபோட்டனர். தற்போது மாங்காடு, ஆலங்குடி, வடக்காடு கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கரில் மிளகு பயிரிடப்பட்டுள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட மிளகு தற்போது புதுக்கோட்டையில் நல்ல விளைச்சலை தருகிறது. ஒரு தாவரத்தின் மூலம் 10 கிலோ வரை காய்ந்த மிளகு அறுவடை செய்ய முடிகிறது.
கொரோனா ஊரடங்குக்கு முன்பு ஒரு கிலோ மிளகு ரூ.1000 என்ற அளவில் விலையை தொட்டது. ஆனால் தற்போது ரூ. 600 ஆக சரிந்துள்ளது.
37 மிளகு வகைகள் உள்ளன. இதில் கரிமுண்டா, காவேரி, பன்னீர் 1, 7 ஆகிய 4 ரகங்கள் அதிகம் புதுக்கோட்டையில் பயிடப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மிளகு மலபார் மிளகுக்கு இணையாக இருக்கிறது.
ஆனால் புதுக்கோட்டை மிளகு இன்னமும் பிரபலம் ஆகவிலலை. இதுவும் விலை குறைவுக்கு காரணமாக இருக்கிறது. புதுக்கோட்டையை சேர்ந்த ராஜகண்ணு என்ற விவசாயி கூறும்போது, கொரோனா பேரிடருக்கு முன்பாக 2018 ல் தாக்கிய கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தென்னை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் மிளகு உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2, 3 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது புதிதாக மரங்களை நடவு செய்து அதில் மிளகு கொடியை படர விடுகின்றனர். வாய்ப்பு இல்லாதவர்கள் குழாய்களை பதித்து அதில் படர விடுகிறார்கள்.
ஊரடங்கு மட்டும் விலை குறைவுக்கு காரணமாக இருக்கவில்லை. பக்கத்து நாடான இலங்கையில் மிளகு மலிவான விலைக்கு கிடைக்கிறது. இறக்குமதி அதிகம் இருப்பதால் உள்ளூர் மிளகுக்கு மவுசு குறைந்துவிட்டது என்றார்.
Next Story






