என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ.25 லட்சம் நகை கொள்ளை வழக்கு- டிரைவர் கைது

    புதுவையில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ.25 லட்சம் நகையை கொள்ளையடித்தது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியில் வசித்து வந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தனகாந்தராஜ். இவரது மனைவி பார்வதி(வயது75). இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனகாந்தராஜ் இறந்து விட்டார். இதனால் பார்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக பார்வதியால் தனியாக நடமாட முடியாது.

    இதற்காக அவருக்கு உதவி செய்ய தங்களுக்கு அறிமுகமான கார் டிரைவர் எட்வர்ட் என்பவரை பார்வதியின் மகன்கள் ஏற்பாடு செய்தனர். தொடக்கத்தில் எட்வர்ட் பார்வதியை நல்ல முறையில் கவனித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இதனால் எட்வர்ட் மீது பார்வதி அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் பார்வதி தவறி விழுந்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் பார்வதி படுத்த படுக்கையானார். அவருக்கு வேண்டிய உதவிகளை எட்வர்ட் செய்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வதி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நகைகளை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து பார்வதி தனது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் நகை கொள்ளை குறித்து பார்வதி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பார்வதியின் வீட்டுக்கு எட்வர்ட்டை தவிர வேறு யாரும் வந்து செல்லாததால் போலீசாருக்கு எட்வர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து எட்வர்ட்டை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது எட்வர்ட் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் எட்வர்ட்டிடம் தங்களுக்கே உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பார்வதி வீட்டில் பீரோவில் கள்ளசாவி போட்டு நகையை கொள்ளையடித்ததை எட்வர்ட் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து நகையை மீட்கும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×