என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை
அருப்புக்கோட்டை அருகே பெண் விவகாரத்தில் காரை ஏற்றி விவசாயி கொலை
திருமணமான பெண்ணிடம் ஏன் பேசுகிறாய் என்று கேட்ட விவசாயி மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் செந்தில் (வயது 45), விவசாயி. இவரது உறவு பெண்ணிடம் அதே ஊரை சேர்ந்த பெத்துகுமார் செல்போனில் பேசி உள்ளார்.
திருமணமான பெண்ணிடம் ஏன் பேசுகிறாய்? என செந்தில், அவரது மகன் சூர்யா ஆகியோர் பெத்துகுமாரை கண்டித்தனர்.
இதுதொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் செந்தில் உறவு பெண்ணிடம் பேசுவதை பெத்துகுமார் நிறுத்தினார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் செல்போனில் பேசி உள்ளார். இதுபற்றி சூர்யாவுக்கு தெரியவந்தது.
அவர் பெத்துகுமாரின் சகோதரர் விஜயகுமாரிடம் இதுபற்றி தெரிவித்தார். அப்போது அவர், அவதூறாக பேசியதோடு, நான் கொப்பு சித்தம்பட்டி ரோடு மலட்டம்மாள் கோவில் அருகே இருக்கிறேன். நீ இங்கு வா... பார்ப்போம் என கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து சூர்யா தனது ஆட்டோவில் சம்பவ இடத்திற்கு புறப்பட்டார். அப்போது அவருடன் தந்தை செந்தில், சகோதரர் வெயில்ராஜ் (19) ஆகியோரும் சென்றனர்.
அவர்கள் சென்றதும் அங்கு இருந்த பெத்துகுமார், விஜயகுமார் மற்றும் கோபிநாத், ராஜபாண்டி, பாண்டியராஜன் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சூர்யா உள்ளிட்ட 3 பேரையும் தாக்கினர்.
அப்போது அங்கு காரில் வந்த பெத்துகுமாரின் தாயார் விஜயலட்சுமி, எதிர் தரப்பை சேர்ந்த சூர்யா உள்பட 3 பேர் மீதும் காரை ஏற்றினார். இதில் செந்தில் பலத்த காயம் அடைந்தார்.
அவரை சூர்யாவும், வெயில் ராஜூம் ஆட்டோவில் தூக்குப்போட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செந்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி, அவரது மகன்கள் பெத்துகுமார், விஜயகுமார் ஆகியோர் தேடி வருகின்றனர்.
Next Story






