search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த கவர்னர் ஆர்.என்.ரவி.
    X
    தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த கவர்னர் ஆர்.என்.ரவி.

    தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

    தமிழக பாரம்பரிய உடை அணிந்து கவர்னர் ஆர்.என்.ரவி பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை, கும்பகோணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தஞ்சைக்கு வந்தார். மாலையில் முன்னாள் படை வீரர்களை சந்தித்து பேசினார். 

    பின்னர் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்துக்கு சென்று அங்குள்ள அரிய வகை நூல்களை பார்வையிட்டார். அங்குள்ள அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஒலைச்சுவடிகள், ஓவியங்கள், 19-ம் நூற்றாண்டு வரைபடம், மன்னர் காலத்து போர்க்கருவிகள் உள்ளிட்டவற்றை கண்டுகளித்தார். மேலும் ஒலைச்சுவடிகள் மின்னுருவாக்கம் செய்யப்படும் பணியையும் ஆய்வு செய்தார்.


    இதையடுத்து மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, பட்டுத் துண்டு, வெள்ளை நிற சட்டை அணிந்து வந்தார். அவருடன் அவரது மனைவி லெட்சுமி மஞ்சள் நிற சேலை உடுத்தியிருந்தார்.

    பெரிய கோவிலுக்கு வந்த கவர்னரை இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் வரவேற்றார். பின்னர் அவருக்கு பெரிய கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.


    தொடர்ந்து கோவிலில் வராகி அம்மன், பெருவுடையார், பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தார். அப்போது கோவிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்களை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜ பான்ஸ்லே விளக்கி எடுத்துக் கூறினார்.

    இதனை முன்னிட்டு பெரியகோவிலில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×