search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ரெயில்வே கீழ்பாலம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளி அருகே ரெயில்வே கீழ்பாலம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    பேராவூரணி:

    பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, ஆத்தாளூர்  வீரமாகாளியம்மன் சாலையில், ரெயில்வே கேட் கீழ் பாலம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, ஆத்தாளூர் கிராமத்தைச் சேர்ந்த த.முருகேசன், வழக்குரைஞர் மணிகண்டன், கே.சுப்பிரமணியன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மற்றும் ரயில்வேத்துறை உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறி இருப்பதாவது, திருவாரூர் & காரைக்குடி அகல ரெயில்பாதையில், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஆத்தாளூரில், ரெயில்வே கேட் உள்ளது. 

    இந்த ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டு ரயில்வே கீழ் பாலம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    இந்த ரெயில்வே கேட்டிற்கு அருகில், மாவடுகுறிச்சி கீழக்காடு, பேராவூரணி டவுன் நீலகண்டபுரம், சொர்ணக்காடு, ஆகிய இடங்களில் ரெயில்வே நிர்வாகம் கீழ்பாலம் அமைத்துள்ளனர். 

    இந்த கீழ்பாலங்கள் அனைத்தும், முறையான வடிவமைப்பு இல்லாமல், பாம்புபோல் வளைந்து இருப்பதால் பேருந்து, டிராக்டர், கதிர் அறுக்கும் எந்திரம், லாரி போன்ற கனரக வாசுனங்கள் சென்றுவர இயலாத நிலையிலும், மழைக்காலங்களில் மழைநீர் தரைப்பாலத்தில் தேங்கி, பாசிபடர்ந்து குளம்போல் உள்ளதாலும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் மக்களின் பயன் பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட, இத்தகைய கீழ்பாலங்கள் மக்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளது.

    எனவே, மக்கள் இந்த கீழ்பாலத்தை பயன்படுத்த முடியாமல், மீண்டும் பழையபடி ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். ரெயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள, கீழ் பாலங்களால் மக்கள் மிகுந்த அவதியுற்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் எங்கள் பகுதியான ஆத்தாளூரில் ரெயில்வே கேட் அகற்றிவிட்டு, கீழ் பாலம் அமைக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. ரெயில்வே கேட், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. 

    சுமார் 25&க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் 500&க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் மேற்படி ரெயில்வே கேட்டை கடந்து தான் வருகின்றனர்.

    இந்த இடத்தில் கீழ்பாலம் அமைந்தால் மழைக்காலத்தில் கீழ்பாலத்தில் மழைநீர் தேங்கி, பள்ளி மாணவர்கள் அபாயத்தை உணராமல் கீழ்பாலத்தை கடக்க முற்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளிளை ஒட்டி ரெயில்வே தண்டவாளம் உள்ளதால் கேட்கீப்பர் போன்றோரின் கண்காணிப்பு அவசியமாக உள்ளது. 

    எங்கள் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. மேற்படி கீழ்பாலம் அமைந்தால் விவசாயப்பணிக்காக டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரம், லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

    மேலும் எங்கள் ஊரில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்லும் வழியில்தான் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு கீழ்பாலம் அமைந்தால் பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உருவாகிவிடும்.

    எனவே, பேராவூரணி டவுன் ஆத்தாளூரில் ரெயில்வே கீழ்பாலம் அமைக்கும் பணியை கைவிடவும், தொடர்ந்து ரெயில்வே கேட் பயன்பாட்டில் இருக்கும் படியும் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்“ இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×