என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறங்காமல் மக்கள் பணியாற்றி வருகிறார்-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறங்காமல் மக்கள் பணியாற்றி வருகிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க.இளைஞரணி சார்பில் தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் 69&வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் நேற்று இரவு நடைபெற்றது.
பிரமாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 1,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தையல் மிஷின், டீ பாய்லர், இட்லி குண்டா உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசும்போது கூறியதாவது:-
திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக இருப்பது நமக்கு பெருமை. இங்கு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகின்றனர்.
தி.மு.க.ஆட்சியில் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. இந்த துறை மூலம் தனியார் வசம் இருந்த கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டது. கடைசி காலத்தில் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை கைவிட்டுவிட்டார். கடவுள் இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூறினார்.
தி.மு.க ஆன்மீக வாதிகளுக்கும் துணையாக இருக்கிறது. அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்பது பெரியாரின் கனவு. கோவிலில் பூஜை செய்பவர்களின் பிள்ளைகளும் தற்போது எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போலதான் மற்றவர்களும் கோவில் பூஜை செய்வதில் தவறில்லை என்று அனைவரும் அர்ச்சகராகும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது மற்றவர்களும் பூஜை செய்வதில் எந்த தவறும் இல்லை. அதையும் கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.
கிராமங்களில் அங்குள்ள மக்களே பூஜை செய்கின்றனர்.நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைதான் காரணம்.
கடந்த 9 மாதங்களாக முதல்&அமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அவர் இரவில் தூங்காமல் அமைச்சர்களை தொடர்பு கொண்டு திட்டப் பணிகள் எப்போது நிறைவடையும் என்று கேட்டு வருகிறார். என்னிடம் ஒரு நாள் இரவு 2 மணியளவில் பேசினார். அப்போது மதுரையில் நூலகம் கட்டும் பணி தொடர்பாக கேட்டறிந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






