என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    அ.தி.மு.க. ஆதரவுடன் ஜெயிப்பதா? தி.மு.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்து கட்சியினர் போராட்டம்

    உப்பிலியபுரம் அருகே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றதால் திமுக கொடிக்கம்பத்தை சாய்த்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உப்பிலியபுரம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட் டம் துறையூர் உப்பிலிய புரம் அருகே உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த மறைமுக தேர்தலில் கட்சி தலைமை அறிவித்த 7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மேகலா வெள்ளையன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    பின்னர் துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் கட்சி தலைமை விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்த மனோன்மணியம் என்பவரை முன்மொழிந்தது. இதற்கிடையே அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த சேர்த்தல ‌ஷங்கர் அபிஷேக் போட்டியிட்டார்.

    இறுதியில் 8 வாக்குகள் பெற்று துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் 3 தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

    இது மனோன்மணியத்தின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்த தி.மு.க.வினர் அங்குள்ள தி.மு.க. கட்சி கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து கட்சி வேட்டிகளை அவிழ்த்து எறிந்து சாலையில் நின்று அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே உப்பிலியபுரம் பேரூரட்சியில் தி.மு.க.வேட்பாளர் சசிகலா தேவி ராஜசேகர் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    துணை தலைவர் தேர்தலில் 9 வாக்குகள் பெற்று தி.மு.க.வை சேர்ந்த சித்ரா துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜாங்கம் 6 வாக்குகளுடன் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.
    Next Story
    ×