என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் போட்டி போட்ட காட்சி.
முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு
ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்றன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மாசித்திரு விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு விழாவானது அரசு விதிகளுக்கு உட்பட்டு செங்கவள நாட்டவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கோவிலூர் பெரியகுளம் பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி அருகில் அரசு அதிகாரிகள் அமர்ந்து பார்வையிடுவதற்கான கேலரி அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு காளைகள் கால்நடை மருத்துவர்களின் சோதனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டது.
டோக்கன் முறைப்படி மாடுகள் வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டது. அதுபோல் மாடுகளை அடக்கும் வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் மற்றும் கொரோனா சான்றிதழுடன் மூன்று அணிகளாக களத்தில் இறக்கப்பட்டனர். வாடிவாசல் அருகில் மருத்துவ முகாமும் திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர்களால் அமைக்கப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், ஏடிஎஸ்பி, ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, திருவரங்குளம் குழுத்தலைவர் வள்ளியம்மை, தங்கமணி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். களத்தில் 300 மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
வாடிவாசலில் முதன்முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ் வொரு காளைகளாக வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முற்பட்டனர். பல காளைகள் வீரர்கள் கட்டுக்கு அடங்காமல் ஓடின, சில காளைகள் வீரர்களை அடைக்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், சைக்கிள், மேஜை, கட்டில், மிக்சி கிரைண்டர் பாத்திரங்களும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகள், காளையர்கள் கலந்துகொண்டன. ஆலங்குடி டி.எஸ்.பி. வடிவேல், காவல் ஆய்வாளர் அழகம்மை, சப்-இன்பெக்டர் குணசேகரன் மற்றும் திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர்கள் வைத்தியலிங்கம், ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story






