என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணிகள் வருகை
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமார் 14,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
ஊட்டி:
வார விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் வெகுவாக விலக்கிக் கொள்ளப்பட்டு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரியின் முக்கிய சுற்றுலா மையமான ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 9,000 பேர் வந்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இது 14,000 ஆக அதிகரித்திருந்தது.
அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சுமார் 4,000 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 700 பேரும், மரவியல் பூங்காவுக்கு 200 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,500 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 550 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 500 பேரும் வந்திருந்தனர். மேலும் ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 7,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 3,500 பேரும் வருகை தந்திருந்தனர்.
இவர்களைத் தவிர மாவட் டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பைன் பாரஸ்ட், 10--வது மைல், ஷூட்டிங்மேடு, பைக்காரா அருவி, அவலாஞ்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளதாலும், மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்லும் சாலைப்பணியினை விரைவில் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






