என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் திரண்டு இருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்
தமிழகத்தில் அதிகரிக்கும் வெயில்- நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் எதிர்வரும் கோடை சீசன் நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாவை நம்பி உள்ள சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஊட்டி:
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது.
தற்போது தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் விடுமுறையை கழிக்க குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலாபயணிகள் வருகை அதிகம் காணப்படுகிறது. ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா, தொட்டபெட்டா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா இடங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டத்தை அதிகம் காண முடிகிறது. இதனால் ஓட்டல், லாட்ஜ்களும் பரவாக நிரம்ப தொடங்கி இருக்கின்றன.
ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 3,500 சுற்றுலாப் பயணிகள் வந்து இருந்தனர். நேற்று இது 9 ஆயிரம் ஆக அதிகரித்துக் காணப்பட்டது. அரசினர் ரோஜா பூங்காவுக்கு 1,500 பேர் வெள்ளிக்கிழமை வந்திருந்த நிலையில், நேற்று 3 ஆயிரம் ஆக அதிகரித்தது.
தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு சனிக்கிழமை 400 பேரும், மரவியல் பூங்காவுக்கு 100 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 1,800 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 450 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 200 பேரும் வந்திருந்தனர்.
மேலும், ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு சுமார் 2 ஆயிரம் பேரும் வந்திருந்ததோடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு இயற்கை சூழல் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
இதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்றும் ஊட்டியில் ஏராளமான சுற்றுலாபயணிகள் திரண்டு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதனால் ஊட்டி உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சமவெளிப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையிலும், கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையிலும், தற்போதே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் எதிர்வரும் கோடை சீசன் நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாவை நம்பி உள்ள சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story






