என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் ஜெயிலில் காவலர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்டு
கைதி தப்பி ஓடிய சம்பவத்தால் வேலூர் ஜெயிலில் காவலர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ் வெட்டுவாணம் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்கிற முத்துக்குமார்.இவர் கொலை வழக்கு தொடர்பாக பள்ளிகொண்டா போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டார்.
தொடர்ந்து இவருக்கு வேலூர் கோர்ட்டு மூலம் 2019-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் வேலூர் ஜெயிலுக்கு எதிரே உள்ள சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தில் சிறைத் துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது.
முன்னதாக அந்த இடத்தைத் தூய்மை செய்யும் பணிக்காக ஆயுள் கைதி நந்தா உள்ளிட்ட 21 கைதிகளை சிறை வார்டன்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நந்தா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதை சற்றும் எதிர்பாராத வார்டன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் நந்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் நந்தாவை பிடிப்பதற்காக பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஒரு குழுவும், சிறைத் துறையினர் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு வேலூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நன்னடத்தை கைதிகளை சிறைக்கு வெளியே அழைத்து சென்று பணியில் ஈடுபடுத்தும் போது கவனக் குறைவாக செயல்பட்டது தெரியவந்தது.
நந்தாவை அழைத்துச்சென்ற சிறைக்காவலர்கள் சரவணன், சுரேஷ், அன்பரசு மற்றும் துப்புரவு தொழிலாளி உள்பட 4 பேரை சஸ்பெண்டு செய்து சிறைத்துறை எஸ்.பி ருக்மணி பிரியதர்ஷினி நேற்று உத்தரவிட்டார்.
Next Story






