search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    முத்தூரில் 3 நேரடி கொள்முதல் மையங்கள் திறப்பு

    கீழ்பவானி பாசன பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த நஞ்சை சம்பா நெல் பயிர் அறுவடை பணிகள் கடந்த 4 நாட்களாக நெல் அறுவடை எந்திரம், கூலி ஆட்கள் மூலம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, வள்ளியரச்சல், ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. 

    இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை இருந்து வருகிறது. 

    இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்டு மாதங்களில் இரு பிரிவுகளாக கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

    இதன்படி இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து பயன் அடைவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை கால்வாய்களில் இடைவிடாது தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன்படி இப்பகுதி நஞ்சை சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் கீழ்பவானி பாசன கால்வாய் தண்ணீர், மழை நீர், கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரினை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் அதிக மகசூல் தரும் திருந்திய நெல் மற்றும் சாதாரண முறையிலான நெற்பயிர்கள் சாகுபடி செய்தனர். 

    இந்த நிலையில் கீழ்பவானி பாசன பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த நஞ்சை சம்பா நெல் பயிர் அறுவடை பணிகள் கடந்த 4 நாட்களாக நெல் அறுவடை எந்திரம், கூலி ஆட்கள் மூலம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 

    விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை எவ்வித இடைத்தரகு ஏதுமின்றி நல்ல கூடுதல் விலைக்கு விற்று பயன் அடைவதற்காக தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் முத்தூர்-சின்ன முத்தூர் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே செயல்பட்டு வரும் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 3 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டு உள்ளன.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் திறக்கப்பட்டு உள்ள 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது வயல்களில் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் அறுவடை செய்த கோ 41, கோ-43. சாவித்திரி 1009, ஏ.டி.டி. 38ஞ்ஐ.ஆர் 20, டீலக்ஸ் பொன்னி ஆகிய ரக நெல் மணிகளை நேரில் கொண்டு வந்து ஒரு கிலோ சன்ன ரகம் அரசு வழங்கும் ரூ100 ஊக்க தொகையுடன் ரூ20.60-க்கும், மோட்டா ரகம் ரூ 75 ஊக்க தொகையுடன் ரூ.20.15-க்கும் விற்பனை செய்து பயன் அடைய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி வழங்கி உள்ளது.

    மேலும் இந்த 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் சுற்றுவட்டார கிராம விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மணிகள் குறிப்பிட்ட அளவு அதாவது 100 டன் அளவு சேர்ந்தவுடன் உடனடியாக சாக்குப்பைகளில் மூட்டைகளாக பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டு லாரிகள் மூலம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தற்போது தயார் நிலையில் செய்யப்பட்டு உள்ளன. 

    மேலும் இந்த 3 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களிலும் விவசாயிகளிடம் இருந்து விரைவில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×