என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகராட்சி தேர்தலில் 182 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
கடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று கடலூர் புனித வளனார் பள்ளியில் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி தேர்தலில் 45 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. அ.ம.மு.க., முஸ்லிம் லீக், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சுயேட்சைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டியிட்டனர்.
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் 286 பேர் போட்டியிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது.
கடலூர் பெருநகராட்சியை தி.மு.க. தேர்தல் அறிக்கையின் படி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக தேர்தல் நடைபெற்றதால் வழக்கத்தைவிட அதிகம் பேர் இத்தேர்தலில் போட்டியிட்டதாக தெரிய வருகிறது. மேலும் முக்கிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட தலைமை எடுத்த முடிவுக்கு பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு சிலர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் கடலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட 286 பேரில் 182 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 45 வார்டுகளில் 3-வது வார்டு திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பிரகாசை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க, பா.ம.க. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.






