என் மலர்
உள்ளூர் செய்திகள்

நோட்டீஸ்
2 குடோன்களில் 24 ஆயிரம் பாட்டில் காலாவதியான குளிர்பானம் பதுக்கல் - உரிமையாளருக்கு நோட்டீஸ்
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் காலாவதியான குளிர்பானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள்.
சென்னை:
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் காலாவதியான குளிர்பானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலை பகுதியில் பின்னிங்மில் மைதானத்தில் உள்ள குடோனில் ஆய்வு செய்தனர்.
அப்போது சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பல நிறுவனங்களின் குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை எடுத்து ஆய்வு செய்தபோது காலாவதியான குளிர்பானங்களும் இருந்தன.
இதையடுத்து அந்த குளிர் பானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த குடோனுக்கு பக்கத்தில் மற்றொரு குடோனும் இருந்தது. அந்த குடோனை திறக்குமாறு அதிகாரிகள் கூறினார்கள். அதற்கு ஊழியர்கள் அது மரப்பலகை செய்யப்படும் குடோன் என்று தெரிவித்தனர்.
ஆனாலும் அதிகாரிகள் விடாமல் அந்த குடோனை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு காலாவதியான குளிர்பானங்கள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 24 ஆயிரம் பாட்டில்களில் காலாவதியான குளிர்பானங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
இரண்டு குடோன்களிலும் இருந்த காலாவதியான குளிர்பானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக குடோன் உரிமையாளர்கள் மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் உரிய பதில் தருமாறு குடோன் உரிமையாளர்களுக்கு நோட்டீசும் வழங்கினார்கள். மேலும் குடோனில் இருந்த பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story