என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கடலூர் மாநகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கான அறிவிப்பில் திடீர் மாற்றம்

    கடலூர் மாநகராட்சியில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு முகவர் மட்டும் அனுமதி அளித்திருந்தனர். தற்போது இதிலிருந்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

    இதனையொட்டி கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் பதிவுசெய்யப்பட்ட வாக்குப் பெட்டி எந்திரங்கள் பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு சென்று கடலூர் புனித வளனார் பள்ளி மற்றும் அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சீல் வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி மற்றும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாளை (22-ந் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அந்தந்த வேட்பாளர்கள் தங்களது முகவர்கள் விபரம் குறித்து மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    கடலூர் மாநகராட்சியில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு முகவர் மட்டும் அனுமதி அளித்திருந்தனர். தற்போது இதிலிருந்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றத்தில் ஒரு வேட்பாளருடன் அந்த வார்டுகளில் எத்தனை வாக்குச்சாவடி மையம் இருந்ததோ, அந்த வாக்குச் சாவடி மையத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு முகவர்கள் என்ற கணக்கின் அடிப்படையில் வேட்பாளருடன் 4 முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து இப்பணியில் வேட்பாளர்கள் தங்களுக்கான முகவர்கள் உடன் கொண்டு செல்வதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு திரண்டுள்ளனர்.

    மேலும் முகவர்களுக்கான படிவம் அவர்களுடைய புகைப்படம் போன்றவற்றின் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த திடீர் மாற்றத்தால் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வாக்கு மையத்தில் ஒவ்வொரு முறையும் 3 வேட்பாளர்கள் அனுமதித்து அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடித்து உரிய சான்றிதழ் வழங்கிய பின்பு அவர்கள் வெளியில் வர வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்து 3 வேட்பாளர்கள் அனுமதித்து அவர்களுடன் 4 முகவர்கள் உடன் சென்று வரலாம்.

    இதன் காரணமாக ஏற்கனவே வாக்குச்சாவடி மையத்தில் நாற்காலி போடப்பட்டிருந்த நிலையில் தற்போது சற்று மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பாதுகாப்பு மையங்கள் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    Next Story
    ×