search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னை மாநகராட்சியில் குறைந்த ஓட்டுப்பதிவு எந்த கட்சிக்கு சாதகம்?- நிபுணர்கள் பரபரப்பு அலசல்

    வடசென்னையை பொறுத்தவரை சராசரியாக 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுப்பதிவாகி இருக்கிறது. மணலி மண்டலத்தில் உள்ள 17-வது வார்டில் மிக அதிக அளவில் அதாவது 84.58 சதவீதம் பதிவாகி இருக்கிறது.


    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாளை வெளி வர உள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நக ராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தாலும் எல்லோரது பார்வையும் தலைநகர் சென்னை மாநகராட்சியை நோக்கியே இருக்கிறது.

    200 வார்டுகளை கொண்ட பெருநகரமான சென்னை மேயர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. எனவே இந்த மாநகராட்சியை கைப்பற்றுவதில் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் போராடுவதில் ஆச்சரியம் கிடையாது. ஆனால் சென்னையின் வாக்குப்பதிவுதான் இந்த தேர்தலில் எல்லோரையும் யோசிக்க வைத்துள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 59.01 சதவீதமும், கடந்த சட்டமன்ற தேர்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவானது. அதற்கு முந்தைய தேர்தல்களிலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவானதுதான் வரலாறு. ஆனால் முதல் முறையாக 50 சதவீதத்துக்கும் கீழ் வாக்குப்பதிவு சரிந்து இருப்பது இதுவே முதல் முறை. மொத்தம் 43.65 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளன.

    வாக்குப்பதிவு குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சொந்த ஊர்களுக்கு சென்றது, விரக்தி என்றெல்லாம் கூறப்படுகிறது. அது ஒருபுறம் இருந்தாலும் வாக்குப்பதிவு மிகவும் குறைந்தது யாருக்கு சாதகமாக இருக்கும்? யாருக்கு பாதமாக இருக்கும்? என்று அலசப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி

    சென்னையை பொறுத்தவரை அன்றாடம் கூலி வேலைபார்க்கும் அடித்தட்டு மக்கள், நடுத்தரவாசிகள், நன்கு படித்த வசதி படைத்தவர்கள் என்று 3 வகையாக இருக்கிறார்கள். இதில் படித்தவர்கள், வசதிபடைத்தவர்கள்தான் பெருமளவில் வாக்களிக்க வரவில்லை என்பது வார்டு வாயாக பதிவாகி இருக்கும் வாக்குகள் மூலம் தெரியவந்துள்ளது.

    வடசென்னையை பொறுத்தவரை சராசரியாக 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுப்பதிவாகி இருக்கிறது. மணலி மண்டலத்தில் உள்ள 17-வது வார்டில் மிக அதிக அளவில் அதாவது 84.58 சதவீதம் பதிவாகி இருக்கிறது. அதே மண்டலத்தில் 15-வது வார்டிலும் 69 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    ஆனால் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் அதிகமாக உள்ள அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகி உள்ளன.

    அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள 102-வது வார்டில் 32.23 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதேபோல் தேனாம்பேட்டை மண்டலத்தில் 126-வது வார்டில் 33 சதவீத வாக்குகள் தான் பதிவாகி உள்ளன.

    வழக்கமாக தேர்தலில் திரை நட்சத்திரங்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நடிகை திரிஷா உள்பட பலர் வாக்களிக்கவில்லை. அவர்களை பார்ப்பதற்காக காத்து நின்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இவ்வாறு ஆர்வமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு குறைந்து இருப்பது யாருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.

    பொதுவாக வாக்குப்பதிவு அன்று மிக அதிகமாக மக்கள் அலை அலையாக திரண்டு வந்து வாக்களித்தால் அது ஆளும் கட்சி மீதான அதிருப்தியால் அந்த கட்சியை அகற்றி விட்டு புதிய கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்காக என்பதுண்டு.

    மக்கள் அமைதியாக இருந்து விட்டால் அது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்பதுண்டு. அந்த வகையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து இருப்பது தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று அரசியல் கணிப்பாளரான மாலன் கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-

    பொதுவாகவே வசதி படைத்த பிரிவினர் யாரையும் நம்பி இருப்பதாக நினைப்பதில்லை. அவர்கள் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என்று யாரையும் எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் கல்வி, சுகாதார பிரச்சினைகள், ரேசன் பிரச்சினை என்று எதுவும் அவர்களுக்கு ஏற்படுதில்லை.

    மேலும் இந்த தேர்தல் புதிய ஆட்சிக்கான தேர்தல் கிடையாது. எனவே ஆதரவு அலை, எதிர்ப்பு அலை என்பதும் கிடையாது. ஓட்டுக்கு பணம் கொடுத்ததும் பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் பெருமளவு நடந்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்களும் அதிக அளவில் வாக்களித்து இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப் பதிவு ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு சாதகமாகவே அமையும்.

    வசதிபடைத்த பிரிவினர், படித்தவர்கள் தான் அதிக அளவில் பா.ஜனதா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அந்த பிரிவினர் பெரிய அளவில் வாக்களிக்க வரவில்லை. எனவே அந்த இரு கட்சிகளுக்கும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.

    வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சுயமாக உணர்ந்து வாக்களிப்பவர்கள் மொத்த வாக்காளர்களில் 3-ல் ஒரு பங்கு தான் இருப்பார்கள். இன்னொரு பங்கு மக்களுக்கு விழிப்புணர்வு, கட்டாயம் வாக்களியுங்கள் என்று உசுப்பிவிடுதல் அவசியம். சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் அப்படித்தான் செய்கிறார்கள். குடியிருப்போர் நலச்சங்கங்கள், கட்சிகள் வாக்குப்பதிவை அதிகரிக்க தீவிரமாக பணியாற்றும்.

    அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் மாநில தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை தீவிரப்படுத்தி இருந்தால் வாக்குப்பதிவு கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு இருந்து இருக்கும். இன்னொரு பகுதி மக்களை சொல்லி அழைப்பது இயலாத காரியம்.

    பெருநகர வசதி படைத்தவர்களை பொறுத்த வரை அவர்களுக்கு எதுவும் தேவையில்லை என்ற மனநிலையில் இருப்பார்கள். வாக்குப்பதிவு குறைந்ததை வைத்து யாருக்கு சாதகம், பாதகம் என்பதை இப்போது கணிப்பது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்:-

    பொதுவாக இன்றைய அரசியல் மீதும், அரசியல் வாதிகள் மீதும் மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய் விட்டது. அரசியல் என்பது மக்களுக்கு தொண்டாற்றும் களம் என்பதை தாண்டி அவரவர் பிழைப்புக்கான இடம் என்றாகி விட்டது. அதனால்தான் இருப்பதில் யார் பரவாயில்லை என்று ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்து மக்கள் வாக்களிக்கிறார்கள்.

    படித்தவர்களை பொறுத்தவரை இப்படி இவர்கள் பிழைப்பு நடத்த நாம் நேரத்தை வீணாக்கி, வரிசையில் நிற்க வேண்டுமா என்று நினைக்கிறார்கள். அதுதான் வாக்குப்பதிவு குறைவுக்கு முதல் காரணம்.

    பொதுவாக எல்லா தேர்தலிலும் விளிம்பு நிலை மக்கள்தான் அதிகாலையிலேயே திரண்டு வந்து வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் அதுவும் இல்லை. அதற்கு காரணம் அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் இருந்து இருக்கலாம். தி.மு.க. தான் சரியில்லை அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என்று நினைத்தால் அங்கு மக்களை கவரும் தலைவர்கள் இல்லை.

    ஒரு கட்சி சரியில்லை என்று எதிரான இன்னொரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டு மென்றால் அந்த பக்கத்தில் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய தலைவர் வேண்டும். நமக்கான கட்சிகள், நமக்கான தலைவர்கள் என்ற எண்ணம், நம்பிக்கை அற்றுப்போய் விட்டது. எனவே மரியாதையும் இல்லாமல் ஆகி விட்டது. ஆளும் கட்சி மீது எதிர்ப்பு வலுப்பெறும் போதுதான் வாக்குப்பதிவும் அதிகமாக இருக்கும். இல்லாத பட்சத்தில் இருப்பவர்கள் இருந்துவிட்டு போகட்டும் என்றுதான் நினைப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணியாக நின்று தேர்தலை சந்தித்தன. எதிராளிகள் சிதறிவிட்டன. எனவே எப்படியும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையால் மற்றவர்கள் ஆர்வம் காட்ட வில்லை. மேயர் தேர்வு நேரடி தேர்தலாக இருந்திருந்தால் மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வம் அதிகம் இருந்திருக்கும்.

    இடம்பெயர்ந்து வாழும் மக்களிடம் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. எனவேதான் வாக்குப்பதிவு இவ்வளவு சரிந்து இருக்கிறது. இது தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

    Next Story
    ×