என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள். கொலையுண்ட சத்யா, கைதான ரவி.
    X
    வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள். கொலையுண்ட சத்யா, கைதான ரவி.

    ஒடுகத்தூரில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

    ஒடுகத்தூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டேன் என தற்கொலை நாடகமாடிய தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஓங்க பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 33) கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்தார். 

    ஆம்பூரை அடுத்த மேல் சானாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சத்யா (26) ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு 2&வது திருமணம் நடந்தது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா அவரது தம்பிக்கு போன் செய்து கணவர் குடும்பத்தினர் ரூ.50,000 கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். சத்யாவின் குடும்பத்தினர் மருமகன் ரவி மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதானம் செய்து வைத்தனர்.

    கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ரவி சத்யாவை கடுமையாக தாக்கினார். மேலும் அவரது கழுத்தை நெரித்தார். இதில் சத்யா துடிதுடித்து இறந்தார்.

    சத்யா உடலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக ரவி தெரிவித்தார். ஆனால் சத்யாவின் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தது.இதை கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். 

    இதனையடுத்து 50&க்கும் மேற்பட்டோர் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்யாவை ரவி மற்றும் அவரது உறவினர்கள் கொலை செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். போலீசார் ரவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது ரவி மனைவியை அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.

    ரவியை போலீசார் கைது செய்தனர்.அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    திருமணமான புதிதில் சத்யாவுடன் சந்தோசமாக வாழ்ந்தேன். நான் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சத்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி என்னிடம் அது பற்றி கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    கடந்த சில நாட்களாக அவர் எனக்கு தொந்தரவு அளிக்கத் தொடங்கினார். நேற்று முன்தினம் இரவு இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் சத்யாவை அடித்தேன். மேலும் அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    போலீசார் கைது செய்வார்கள் என்ற பயத்தில் சத்யாவின் உடலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டேன். 

    பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் சத்யாவின் கழுத்தில் இருந்த நகக்கீறல்கள் மூலம் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×