என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுதம நதியில் தீர்த்தவாரி நடந்த போது எடுத்த படம்.
கவுதம நதியில் தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு
கவுதம நதியில் தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிகழ்ச்சிகளில் பல்வேறு திருவிழாக்களை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.
மாசி மகத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு சின்னகாங்கேயனூர் கிராமத்தில் அமைந்துள்ள கவுதம நதியில் நேற்று மதியம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சுவாமி -அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அங்கு பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன.
கவுதம நதியில் நீராடிய பக்தர்கள் தங்களது ஆடைகளை நதியில் விட்டுச்சென்றனர் ஆயிரக்கணக்கானோர் விட்டுச்சென்ற ஆடைகளை சிலர் எடுத்து அதனை வெயிலில் உலர்த்தி எடுத்துச் சென்றனர்.
முன்னதாக வல்லாள மகாராஜாவிற்கு அருணாச்சலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் அதே பகுதியில் நடைபெற்றது. இதில் மகாராஜா சந்ததியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர் முன்பு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் பல்லக்கில் சின்ன காங்கேயனூர் புறப்பட்டுச் சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






