என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
காரமடையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு
3 நாட்களுக்கு பிறகு உடல் தண்ணீரில் மிதந்து வந்தது.
காரமடை:
கோவை மாவட்டம் காரமடை அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் சிவகாசி (வயது 18). இவர் தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று மருதூர் அருகே உள்ள உப்பு பள்ளம் குட்டை பகுதிக்கு குளிக்க சென்றனர்.
அப்போது சிவகாசி திடீரென ஆழமான பகுதிகு சென்று நீரில் மூழ்கினார். இதனால் பயந்து போன அவரது நண்பர்கள் அங்கிருந்து ஓடி வீட்டுக்கு சென்றனர்.
இந்த நிலையில் இதை தெரியாமல் நேற்று சிவகாசியின் பெற்றோர் வாட்ஸ்&அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனது மகன் காணவில்லை என போட்டோ மற்றும் ஆடியோவை வெளியிட்டு தேடி வந்தனர்.
இதனை பார்த்த சிவகாசியுடன் குளிக்க சென்ற நண்பர் ஒருவர் அவரது பொற்றோரிடம் தாங்கள் உப்பு பள்ளம் குட்டை பகுதிக்கு குளிக்க சென்றோம்.
அப்போது சிவகாசி நீரில் மூழ்கி விட்டார். அதை பார்த்து நாங்கள் பயந்து போய் வீட்டுக்கு வந்து விட்டோம் என்றார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுது குடும்பத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இதுகுறித்து காரமடை போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தண்ணீரில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு வரை சிவகாசி கிடைக்ககாததால் தீயணைப்புத்துறையினர் தேடும் பணியை நிறுத்திவிட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தீயணைப்புத் துறையினர் குட்டையில் இறங்கி தேடுவதற்காக வந்தனர். அப்போது சிவகாசியின் உடல் நீரில் மிதந்து கொண்டு இருந்தது.
உடனே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சிவகாசியின், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






