என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    அனைத்து பகுதியிலும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்- தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை

    தேர்தல் அமைதியாக நடைபெறவும், வாக்காளர்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் ஏதுவான சூழலை உருவாக்க தேர்தல் ஆணையம் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரிய சாமி, தமிழக தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பரப்புரை 17-ந் தேதி நிறைவடைகிறது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்த மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந்தேதி இரவு 12 மணி வரையிலும் மூடப்பட்டு இருக்கும் என அறிவித்துள்ளது.

    தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22-ந் தேதி ஒருநாள் முழுவதும் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது தேர்தல் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையில் சுமார் 5 கி.மீட்டர் சுற்றளவு என்று வரையறுக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    ஊரகப்பகுதிகளில் செயல்படும் மதுக்கடைகளில் இருந்து மதுபானங்கள் எளிதில் நகரப்பகுதிகளில் ஊடுருவும் என்பதை மறுக்க முடியாது.

    ஏனெனில் நகர்மயமாகி வரும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 50 சதவீத மக்கள் நகர்புறங்களில் வசித்து வருகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    இந்த நிலையில் 17-ந் தேதி காலை 10 மணி முதல் 19-ந்தேதி முடியவும், பின்னர் 22-ந்தேதி ஒரு நாள் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் நகர்புறம், ஊரகம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதன் மூலம் தேர்தல் அமைதியாக நடைபெறவும், வாக்காளர்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் ஏதுவான சூழலை உருவாக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×