search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்த்தங்கால் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்.
    X
    தேர்த்தங்கால் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்.

    ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில் பறவைகள் வருகை அதிகரிப்பு

    ராமநாதபுரத்தில் 2-ம் கட்ட கணக்கெடுப்பின் முடிவில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகிறது. இது கடந்த 5 வருடங்களை காட்டிலும் இந்த ஆண்டு மிக அதிக அளவில் பறவைகள் காணப்படுகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் வன உயிரினக் கோட்டம் சார்பில் தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், சக்கரக் கோட்டை பறவைகள் சரணா லயங்கள், கீழ செல்வனூர்-மேல செல்வனூர் பறவைகள் சரணாலயம் மற்றும் உத்திர கோசமங்கை கண்மாய், பெரிய கண்மாய், மல்லல் கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய், மேல்மாந்தை கண்மாய் போன்ற சரணாலயங்களுக்கு வெளிப்பகுதியிலுள்ள கண்மாய்களிலும் 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

    இந்த கணக்கெடுப்பில் 50 பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டது தனிச்சிறப்பு ஆகும். இவர்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டிருந்தனர்.

    சரணாலய பகுதியினை காட்டிலும் சரணாலயத்திற்கு வெளிப்பகுதியிலும் பறவைகள் அதிகளவு காணப்படுகின்றது. இந்த கணக்கெடுப்பில் சிக்கல் பகுதியிலுள்ள கண்மாயில் சுமார் 241 பூ நாரை (பிளமிங்கோ) பறவைகள் காணப்பட்டது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    அதேபோல உத்திர கோசமங்கை கண்மாய், மல்லல் கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்களிலும் அதிகளவு பறவைகள் காணப்பட்டது.

    பறவைகள் சரணாலய கண்மாய்களில் சுமார் 75 சதவிகித அளவிற்கு நீர் காணப்படுகிறது. இதனால் பறவைகள் 2 முறை மற்றும் சில பறவைகள் 3 முறை இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது எந்த பகுதியிலும் காணப்படாத சிறப்பு ஆகும்.

    கணக்கெடுப்பில் சுமார் 120 இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் முக்கு நாரை, நீர்க்காகங்கள் மற்றும்கொக்கு வகைகள் காணப்படுகிறது.

    மேலும் ராமநாதபுரத்தில் 2-ம் கட்ட கணக்கெடுப்பின் முடிவில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகிறது. இது கடந்த 5 வருடங்களை காட்டிலும் இந்த ஆண்டு மிக அதிக அளவில் பறவைகள் காணப்படுகிறது.

    இந்த பறவைகள் கணக்கெடுப்பு வனஉயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆலோசனையின் படி உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், ராமநாதபுரம் வனஉயிரின வனச்சரக அலுவலர் ஜெபஸ் மேற்பார்வையில் நடந்தது.

    Next Story
    ×