search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையில் நனைந்து கிடக்கும் நெல் மூட்டைகள்.
    X
    மழையில் நனைந்து கிடக்கும் நெல் மூட்டைகள்.

    நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை.

    நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கண்டிச்சங்காடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கண்டிச்சங் காடு, தினையாகுடி, ஏகப் பெருமாளூர், ஏகனிவயல், திருவங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எடை போடுவதற்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மழையால் நெல்மணிகள் நனைந்து சேதமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்து வருகிறோம், தனியாரில் முறையான விலை போகாததால், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை நாடி வருகிறோம்.

    ஆனால் அங்கு நெல் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதால், இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்க்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. இதனை அதிகாரிகளிடம் சென்று கேட்டால் அலட்சியமான பதிலே கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்கும் தருவாயில் உள்ளது. 

    மேலும் தற்போது உள்ள விலைவாசியில் உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் வாங்கவே வழியின்றி கடனாளிகளாக போராடி விவசாயம் செய்தால், அதை இப்படி தெருவில் போட்டு நாங்களே உட்கார்ந்து அழுது புழம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என வேதனை தெரிவித்தனர். 

    எனவே அரசு உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் மழையில் நனையும் நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தங்கள் பகுதியில் தளத்துடன் கூடிய நிரந்தரமான நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×