search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுவர்கள் விளையாடிய இடத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ராணுவவீரர் கைது

    தேனி மாவட்டம் போடி அருகே சிறுவர்கள் விளையாடிய இடத்தில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரரை போலீசார் கைது செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வ.ஊ.சி நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது மேற்கு வங்க ராணுவ படையில் பணியில் உள்ளார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த முருகன் நேற்று இரவு தனது கைத்துப்பாக்கியுடன் சர்ச் தெரு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த சத்தம் கேட்டதும் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என விசாரித்ததில் முருகன் என உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்து விசாரித்த போது ராணுவத்தால் வழங்கப்பட்ட 100 தோட்டாக்களில் 94 தோட்டாக்கள் மற்றும் கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

    இதற்கு முன்பாக காஷ்மீரில் பணியாற்றிய போது தனது பாதுகாப்பிற்காக 100 தோட்டாக்களுடன் 1.32 எம்.எம். துப்பாக்கியின் உரிமத்தை வாங்கியுள்ளார். பின்னர் காஷ்மீரிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு பணி மாறுதல் ெய்யப்பட்ட நிலையிலும் அந்த துப்பாக்கியை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

    போடியில் தனது வீட்டினை வேறு பகுதிக்கு மாற்றுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பாக தான் வசித்த பழைய வீட்டுப்பகுதியில் வசித்து வரும் தீனதயாளன் (வயது 22) என்பவர் தனது மனைவி சரவணப்பிரியாவிடம் சில்மிசம் செய்ததாக அறிந்து அவரை மிரட்டினார். இதுகுறித்து சரவணப்பிரியா அளித்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் தீனதயாளனை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

    இதனால் தீனதயாளன் தந்தை அண்ணாதுரை முருகன் வீட்டிற்கு வந்து அவரது தாயார் முத்துலட்சுமியிடம் குடிபோதையில் மிரட்டி உள்ளார். இதுகுறித்து முத்துலட்சுமி தனது மகனிடம் தெரிவிக்கவே அண்ணா துரையை மிரட்டும் வகையில் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதாக அவர் தெரிவித்தார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போடியில் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×