என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    கந்து வட்டிக்கு சலூன் கடைக்காரர் தற்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    காட்டுமன்னார்கோவில் அருகே கந்து வட்டியால் சலூன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ரம்ஜான் தைக்கால் பகுதியை சேர்ந் தவர் கவியரசன் (வயது 32). சலூன் கடை நடத்தி வந்தார். அவரது மனைவி ஸ்ரீமதி.

    கவியரசன் மோவூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் வட்டிக்கு வாங்கி உள்ளார். பணம் கொடுத்த சசிகுமார் கவியரசனிடம் வட்டியை கட்டுமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.

    இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சசிகுமார் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கவியரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கவியரசனை ஆபாசமாக திட்டி தாக்கி தனது பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் கவியரசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். தொடர்ந்து காலை கவியரசன் வழக்கம்போல் சலூன் கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது மனைவியை தொடர்பு கொண்ட கவியரசன் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஸ்ரீமதி பதறியடித்துக் கொண்டு சலூன் கடைக்கு சென்றார். ஆனால் அதற்குள் கவியரசன் கடைக்குள் இருந்த மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே கவியரசனின் உறவினர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். மேலும் இவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்து வட்டி கொடுமையால்தான் கவியரசன் இறந்து உள்ளார். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக் டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×