என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவண்ணாமலையில் அரசு பெண் ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

    திருவண்ணாமலையில் அரசு பெண் ஊழியர் வீட்டில் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 49). இவர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 5-ந் தேதி தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது வீட்டை பூட்டி விட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். 

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய கவிதா, தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகையை திருடி சென்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி கவிதா திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. வியாபாரம் செய்வது போல் இருசக்கர வாகனங்களில் வலம் வரும் மர்ம நபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 

    எனவே சந்தேகத்திற்கிடமாக தெருக்களில் வலம் வரும் நபர்களின் அடையாள அட்டை விவரங்களை பெற்று உரிய விசாரணை நடத்தினால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
    Next Story
    ×