search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
    X
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

    வேலூர் மாவட்டத்தில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் வெளியீடு மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணி மேற்கொள்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
     
    கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     
    கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
     
    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்கு பதிவு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கவும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 

    மாவட்டத்தில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளன. தேர்தல் நாளன்று 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

    பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மைக்ரோ தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் வரவில்லை. 

    புகார்கள் வரும்பட்சத்தில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களிடம் அறிக்கை கேட்டு உள்ளோம் தவறாக வேட்பாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

    வேலூரில் பா.ம.க. வேட்பாளர் மிரட்டப்படுவதாக எந்த போலீசிலும் இதுவரை புகார் வரவில்லை. வேலூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் தொடர்பாக எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
    Next Story
    ×