என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாநகராட்சி
    X
    வேலூர் மாநகராட்சி

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேலூர் மாநகராட்சியில் எதிர் வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற குதிரை பேரம்

    வேலூர் மாநகராட்சி வார்டுகளை கைப்பற்றும் நோக்கத்தில் பணபலமிக்க வேட்பாளர்கள் பலரும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    வேலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த ஜனவரி 28-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

    இதில் வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 505 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    நேற்று முன்தினம் நடந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 472 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதன்மூலம், 8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் எம்.சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

    தொடர்ந்து இன்று மாலை வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளன.

    இந்நிலையில் வேலூர் மாநகராட்சி வார்டுகளை கைப்பற்றும் நோக்கத்தில் பணபலமிக்க வேட்பாளர்கள் பலரும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    களத்தில் எதிரணி வேட்பாளர்களுக்கு நிலவும் செல்வாக்கை பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:-

    உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு வார்டிலும் உள்ள ஒவ்வொரு வாக்குகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த கால தேர்தல்களில் ஒரு ஓட்டில் கூட தோல்வியடைந்த வேட்பாளர்கள் பலர் உண்டு.

    இதனால், வேலூர் மாநகராட்சி வார்டுகளைப் பிடிக்க பணபலமிக்க வேட்பாளர்கள் பலர் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

    அதேசமயம், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுவிட்டால் அவருக்கு செல்லக்கூடிய வாக்குகள் தங்களுக்கு சாதமாகும் என்பதாலும், ஒருவேளை எதிர்வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்றுக்கொண்டால் போட்டியின்றி தேர்வாக முடியும் என்ற அடிப்படையிலும் பணபலமிக்க வேட்பாளர்கள் எதிர்வேட்பாளர்களிடம் குதிரை பேரம் நடத்தி வருகின்றனர்.

    இதற்காக நம்பிக்கைக்குரிய நபர்கள் மூலம் பேச்சு நடைபெற்று வருகிறது. இதில், களத்தில் எதிரணி வேட்பாளர்களுக்கு நிலவும் செல்வாக்கைப் பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக தெரிகிறது என்றார்.
    Next Story
    ×