என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் பரிசோதனை கருவியை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மைய கூட்டரங்கில் மாவட்ட
    X
    மண் பரிசோதனை கருவியை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மைய கூட்டரங்கில் மாவட்ட

    சிக்ரி கண்டுபிடித்துள்ள மண் பரிசோதனை கருவி

    காரைக்குடி சிக்ரி கண்டுபிடித்துள்ள மண் பரிசோதனை கருவி விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    காரைக்குடி


    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மையத்தில் சிக்ரி விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மண் பரிசோதனை கருவியினை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, வேளாண்மைத்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிக்ரி ஆராய்ச்சி மைய கூட்டரங்கில் நடைபெற்றது.  மைய இயக்குநர் டாக்டர் கலைச்செல்வி, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மண் பரிசோதனை கருவியை வழங்கினார். 

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    விவசாயிகளின் உயிர்நாடியாக இருப்பது மண்ணாகும். விளைநிலத்தில் மண் நன்றாக இருந்தால் தான் நாம் மேற்கொள்ள உள்ள பயிர் வகைகள் நல்ல மகசூலை பெற்றுத்தரமுடியும். அந்த அளவிற்கு மண் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். 

    அந்த மண்ணை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் பரிசோதனைக்கு எடுத்து வந்து, பரிசோதனை செய்து அதற்குரிய விபரங்கள் தெரிவதற்கு 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். இதனால் விவசாயிகளுக்கு காலவிரயம் மற்றும் பொருட்செலவு ஏற்பட்டு வந்தது.  

    தற்போது காரைக்குடியில் உள்ள சிக்ரி ஆராய்ச்சி நிறுவனத்தை சார்ந்த விஞ்ஞானிகள் மூலம் எளியமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள மண் பரிசோதனைக்கருவி வேளாண்மைத்துறை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

    இந்த கருவியினை ஒவ்வொரு வட்டார அளவிலும் உதவி வேளாண்துறை அலுவலர்கள் தலைமையில் வேளாண்மைத்துறை விரிவாக்க அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக எடுத்துச்சென்று விவசாயிகள் முன்னிலையில் அவர்களின் நிலங்களில் மண் பரிசோதனை செய்து, மண்ணில் உள்ள சத்துத்தன்மை அளவை எடுத்துச்சொல்வதுடன், எந்த வகையான பயிர்களை பயிரிடலாம் எனவும் எடுத்துரைப்பார்கள். 

    இந்த  பரிசோதனை மூலம் ஒரு விவசாயிக்கு 15 நிமிடங்களில் மண் பரிசோதனை செய்து உரிய விவரத்தை தெரிவிக்கமுடியும். இதற்காக விவசாயி குறைவான கட்டணம் செலுத்தினால் போதும். இத்தகைய திட்டம் என்பது விவசாயிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். 

    மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மண் பரிசோதனைக்கருவி தேவையான அளவு பெற்றுக்கொள்ள ஏதுவாக, காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மையம் மூலம் வழங்குவதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் சிக்ரி ஆராய்ச்சி மைய இயக்குநர்(ஓய்வு) டாக்டர்.பாலகிருஷ்ணன், வேளாண் துறை பேராசிரியர்கள் மதியரசன்,  கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழக முதல்வர் செந்தூர்குமரன், காரைக்குடி சிக்ரி ஆராய்ச்சி மையப்பொறியாளர்கள் கென்னடி,  சுரேஷ்,  சசிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×