என் மலர்
உள்ளூர் செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டியில் தங்கம் என நினைத்து கவரிங் நகையை பறிமுதல் செய்த அதிகாரிகள்
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 5 நபர்கள் இருந்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை அச்சன் புதூர் பகுதியை சேர்ந்த சமீர், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சர்புதீன், முகமது இஸ்மாயில், ஷாஜஹான் மற்றும் சபேர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் கணக்கில் வராத ரூ.51 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் சில நகைகள் இருந்தன. அதனை பறக்கும் படையினர் சோதனை செய்தனர். முதலில் பறிமுதல் செய்யப்பட்டது தங்கநகை என்று நினைத்த பறக்கும் படையினர் அந்த நகையை நகை மதிப்பீட்டாளர் மூலம் சோதனையிட்டனர். சோதனை செய்ததில் அது கவரிங் நகை என தெரியவந்தது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கவரிங் நகைகள் வாங்கி செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கவரிங் நகையை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த ரூ.51 ஆயிரம் சத்தியமங்கலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.






