என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன்கடை முன்பு முற்றுகை போராட்டம்
ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்
சீர்காழியில் தரமற்ற அரிசி வினியோகத்தை கண்டித்து ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் ரேசன்கடை (எப்.சி.005) இயங்கி வருகிறது. இந்த கடையில் கோவிலான்தெரு, புளிச்சக்காடு, ஈசானியத்தெரு, மணக்குடிதெரு, சர்க்கான்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயனடைகின்றனர்.
சுமார் 1108 குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட இக்கடையில் எப்பொழுதும் அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில், கோதுமை வகைகள் வழங்கும்போது கூட்டம் அதிகளவு வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த ரேசன் கடையில் சன்னரக அரிசிக்கு பதிலாக சில மாதமாக தரமற்ற குண்டு அரிசியை கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதாம்.
சனிக்கிழமையும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அரிசி வாங்கிய மக்கள் அரிசி சமைக்க முடியாத அளவிற்கு தரமற்று இருந்ததால் ஆத்திரமடைந்து கடையை முற்றுகையிட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆத்திரம் தீராத மக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த குடிமை பொருள் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொடர்ந்து தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுதாகவும், இதனை கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் அதனை கடந்த சில மாதங்களாக வாங்காமல் வெளிசந்தையில் அதிகவிலை கொடுத்து அரிசி வாங்கி சமைத்து சாப்பிடும் நிலை உள்ளதாகவும், இனிவரும் நாட்களில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதன்பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
Next Story






