என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே சிறுவன் அடித்து கொலை: பதட்டம்-போலீஸ் குவிப்பு
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர்கீழக் கொல்லைவீணீ சேர்ந்தவர் செந்தில்நாதன் கார் டிரைவர். இவரது மகன் அஸ்வின் (வயது 4).
இந்த சிறுவனை நேற்று மதியம் 3 மணி முதல் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஊர்மக்கள் சிறுவனை பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
கலீடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் முத்தாண்டிக்குப்பம் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ரஞ்சிதா என்பவர் இந்த சிறுவனை அழைத்துச்சென்றதாக தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஏராளமான போலீசார் மற்றும் ஊர் மக்கள் கிராமம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.
சிறுவன் எங்கும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நள்ளிரவில் பண்ருட்டி-கும்பகோணம் சாலை கொள்ளுக்காரன் குட்டையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இன்று காலை அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் சிறுவன் அஸ்வின் பிணமாக கிடந்தான். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். இதுபற்றி அறிந்த பெற்றோரும் அங்கு விரைந்தனர். அவர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.
சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் இருந்தது. எனவே அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. சிறுவனை கொலை செய்தவர்கள் யார்? எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே கொலை செய்யப்பட்டட சிறுவனை பக்கத்து வீட்டை சேர்ந்த இளம்பெண் ரஞ்சிதா என்பவர் அழைத்து சென்றதாக தெரியவந்து உள்ளது. உடனே அந்த பெண்ணை அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இதையொட்டி அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன், துணை தாசில்தார், வருவாய்ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.






