search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் குவியல்களை குரங்குகள் கூட்டம் சேதப்படுத்தும் காட்சி
    X
    நெல் குவியல்களை குரங்குகள் கூட்டம் சேதப்படுத்தும் காட்சி

    நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால் விவசாயிகள் அவதி பல நாட்களாக காத்திருக்கும் அவலம்

    நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படாததால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மீதமுள்ள 29 ஊராட்சிகள் ஏரி, குளங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி இப்பகுதியில் ஒரே காலகட்டத்தில் நடைபெற்று வருகிறது. கறம்பக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக சம்பா அறுவடை பணிகள் தொடங்கி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தெற்குத்தெரு, திருமணஞ்சேரி, குளந்திரான்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து குவித்தனர். ஆனால் 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை.

    இதனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. மற்ற பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை பெய்தால் நெல் குவியல்கள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் தீத்தானிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் குவியல்களை குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இது குறித்து தீத்தானிப்பட்டியை சேர்ந்த விவசாயி ரெங்கராஜன் கூறும்போது, எங்கள் பகுதியில் தெற்கு தெரு ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஓரிருநாளில் செயல்படாமல் முடங்கிவிட்டது. இணையத்தில் பதிவேற்றி கிராம நிர்வாக அதிகாரியின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இன்று நாளை என மாறிமாறி சொல்வதால் நாங்கள் அங்கேயே காத்திருந்து எங்களது அன்றாட பிழைப்பு பறிபோய் விடுகிறது. 

    இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் உள்ளன.இவைகளைப் பாதுகக்க எங்களுக்கு போதுமான இடவசதி இல்லை. திடீரென மழை பெய்தால் அனைத்து நெல் மூட்டைகளையும் வீணாகிவிடும் நிலையும் உள்ளது. எனவே அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கிறோம் என கூறினார்.
    Next Story
    ×