என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மாடுவிடும் விழாவில் இன்ஸ்பெக்டருடன் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் ஜெயிலில் அடைப்பு
மாடுவிடும் விழாவில் இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து ரகளை செய்து கைதான ராணுவ வீரர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் நேற்று மாடு விடும் திருவிழா நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் விழா நடத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தற்காலிகமாக தடை விதித்திருந்தார்.
நேற்று காலை 11 மணி வரை மாடு விடும் விழா நடத்த தடை உத்தரவு இருந்தது.
இருந்தபோதிலும் கம்மவான்பேட்டையில் மாடு விடும் விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தனர்.தடையை மீறி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.
நேற்று காலையிலேயே கம்மவான்பேட்டை கிராமத்திற்கு காளைகளை கொண்டு வர விடாமல் வேலூர் தாலுகா போலீசார் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கம்மவான்பேட்டை கிராமத்தை ஒட்டி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் வழி மடக்கி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர்.
காட்பாடி அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மோகன் ராஜ் (வயது 35). என்பவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
அவர் கம்மவான்பேட்டைக்கு காளைகளுடன் சென்றதாக கூறப்படுகிறது. அவரை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மோகன்ராஜ் இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வு அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் நிலவழகனை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராணுவ வீரர் மோகன்ராஜை வேலூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
காலை 11 மணிக்கு பிறகு மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் சீறிப்பாய்ந்து காளைகள் சென்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் வீதியிலும் வீட்டு மாடியில் நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த மாடு விடும் விழாவில் சூப்பர்ஸ்டார் முத்து என்ற காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
கொரோனா விதிமுறைகளை மீறியதாக விழாக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






