search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    கவர்னர் தமிழிசை தேசியக்கொடியை ஏற்றுவதை ஏற்க முடியாது- நாராயணசாமி பேட்டி

    தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றுவதை ஏற்க முடியாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். ஆனால் அவர் புதுச்சேரி மாநில முழு நேர கவர்னர் போல செயல்பட்டு வருகிறார்.

    குடியரசு தினத்தன்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த அந்தமான் நிகோபார் தீவு கவர்னர் மத்திய உள்துறையின் அனுமதி பெற்று குடியரசு தினத்தன்று புதுச்சேரி முதல்-அமைச்சர் தேசியக்கொடி ஏற்ற அனுமதி பெற்றார்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பரந்த மனதுடன் புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதனை கவர்னர் செய்ய தவறிவிட்டார்.

    இந்திய சரித்திரத்தில் ஒரு மாநிலத்தின் கவர்னர் 2 இடங்களில் தேசிய கொடியேற்றியதாக சம்பவம் நடைபெறவில்லை. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்று வதற்கு உரிமை உள்ளது.

    அதே சமயத்தில் இரு மாநிலங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அவப் பெயரை தரும்.

    இதனை சுட்டிக் காட்ட காரணம் மத்திய அரசு புதுச்சேரிக்கு கவர்னரை நியமிக்காதது தான். கவர்னரை நியமித்து இருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த எந்த திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவற்றை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை என காரணம் கூறுகிறார்கள். மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    புதுச்சேரியில் ஆளும் அரசு டம்மியாக செயல்படுகிறது. அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு முதல்-அமைச்சர் வேடிக்கை பார்த்து வருகிறார். இதனால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கு தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி ஆட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக சீரழிந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரத்தை தன் கையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் புதுச்சேரியை ஆள லாயக்கற்ற முதல்-அமைச்சர் என மக்கள் தீர்மானித்து விடுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து முதல்-அமைச்சர் எழுந்து புதுச்சேரி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×