search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சித்தாமை மீண்டும் கடலில் விடப்பட்ட காட்சி
    X
    மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சித்தாமை மீண்டும் கடலில் விடப்பட்ட காட்சி

    மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சித்தாமை

    மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சித்தாமை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை  மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா தெற்கு புதுக்குடியிருப்பு மீனவகிராமத்தில் பசுபதி என்ற மீனவர் தனக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்றார்.  அப்போது  அவரது மீன்பிடி வலையில் அரிய வகையான சித்தாமை ஒன்று மாட்டிக்கொண்டது.

    கரை திரும்பியதும் இது பற்றி அவர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தார். திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசன் ஆகியோரின் உத்தரவுப்படியும் வழிகாட்டுதலின்படியும் அந்த ஆமையை மீண்டும் அதன் வாழ்விடம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, அறந்தாங்கி வனச்சரக அலுவலர் சதாசிவம், மணமேல்குடி பிரிவு வனவர்கள் ராஜேந்திரன், அந்தோணிசாமி, அன்புமணி, தற்காலிக  பாதுகாப்பு  காவலர்  முத்துராமன்,  சைமன் ஆகியவர்கள் மீன்பிடி வலையில்  சிக்கிய அரிய  வகை ஆமையான சித்தாமையினை மீட்டு பாதுகாப்பாக கடலில் மீனவர்கள்  உதவியுடன் விடப்பட்டது.

    அந்த சித்தாமை கடலில் நல்ல நிலையில் நீந்தி தனது வாழ்விடம் நோக்கி சென்றது. புதுக்கோட்டை  மாவட்டத்தின்   கடல் பகுதிகளில் சித்தாமை காணப்படுவது இங்கு அதற்கு ஏற்ற வாழ்விடம் உள்ளதை உறுதி செய்துள்ளது.

    இம்மாவட்டத்தில் ஆழம் குறைவான கடற்பகுதிகளில் கடற்புற்கள் அதிகமாக காணப்படுவதால் உணவு தேடி இப்பகுதிக்கு சித்தாமை வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வன உயிரின பாது காப்பு சட்டம் 1972 அட்ட வணைப்படி சித்தாமை பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினம் ஆகும்.

    இவற்றை வேட்டையாடுவது அல்லது தீங்கு விளைவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோருக்கு வன உயிரின  (பாதுகாப்பு) சட்டம் 1972 பிரிவு 51 படி 3 வருடத்திற்கு குறையாமல் ஏழு வருடம் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு குறையால் அபராதமும் விதிக்க வழி வகை உள்ளது.

    எனவே கடல்பசு, கடல் குதிரை, கடல் பல்லி, கடல் அட்டை, டால்பின், திமிங்கலம்  போன்ற  கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க மீனவர்கள் மற்றும் பொது மக்கள் வனத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்ககோரி வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    Next Story
    ×