என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட பாத்திமா
    X
    கைது செய்யப்பட்ட பாத்திமா

    நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை கொன்றேன்- கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

    மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டினம் பகுதியில் 4 வயது சிறுவனை கொன்று உடலை பீரோவுக்குள் பூட்டி வைத்த விவகாரத்தில் கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மணவாளக்குறிச்சி:

    மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டினம் பாத்திமா தெருவைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. இவர் சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா (வயது 28). இவர்களுக்கு ஜோகன் ரிஷி என்ற மகனும் இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது.

    நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜோகன் ரிஷி மதியம் திடீரென மாயமானார். இதையடுத்து சிறுவனை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள் .ஆனால் ஜோகன் ரிஷி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாயார் சகாயசில்ஜா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சிறுவன் ஜோகன் ரிஷியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்த வீட்டிற்கு சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை.

    இதையடுத்து அங்கிருந்த அவரது குழந்தைகளிடம் விசாரித்த போது தனது தாயார் நகைகளை அடகு வைக்க வெளியே சென்று இருப்பதாக கூறினர். இதையடுத்து போலீசாருக்கு சந்தேகம் அதிகமானது. போலீசார் பாத்திமாவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நகைக்கு ஆசைப்பட்டு ஜோகன் ரிஷியை கழுத்தை நெரித்து கொன்று பீரோவில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்தபோது ஜோகன் ரிஷி பிணமாக இருந்தார். 24 மணி நேரத்திற்கு பிறகு ஜோகன் ரிஷி உடல் பீரோவில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது. ஜோகன் ரிஷியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜோகன் ரிஷி, பாத்திமாவால் கொலை செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள் அவரது வீட்டையும் சூறையாடினார்கள். போலீசார் பிடியிலிருந்த பாத்திமாவை பொதுமக்கள் தாக்க முயன்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அந்த பகுதியில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரசம் செய்தனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாத்திமாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது கணவர் சரோபினிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட பாத்திமா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    ஜோகன் ரிஷி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனை கொஞ்சுவது போல் நடித்தேன். பின்னர் அவன் அணிந்திருந்த நகைகளை கழற்றினேன். அப்போது ஜோகன் ரிஷி கூச்சலிட்டான். இதையடுத்து அவன் வாயில் துணியை திணித்தேன். பின்னர் அவன் அணிந்திருந்த நகைகளை கழற்றியபோது ஜோகன் ரிஷி மயங்கி விழுந்தான். அவனை பரிசோதித்த போது ஜோகன் ரிஷி பேச்சு மூச்சு இன்றி இருந்தான். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். இதையடுத்து ஜோகன் ரிஷியை வீட்டிலிருந்த பீரோவில் பூட்டி வைத்தேன்.

    இரவு யாருக்கும் தெரியாமல் கடலில் வீசி விடலாம் என்று திட்டம் தீட்டினேன். ஆனால் குழந்தையைக் காணாமல் அவரது பெற்றோரும் உறவினர்களும் போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு கடற்கரை பகுதியில் சுற்றி வந்தனர். இதனால் என்னால் ஜோகன் ரிஷியின் உடலை கடல் பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. நேற்று காலையிலும் எப்படியாவது கடலில் வீசி விடலாம் என்று நினைத்தேன்.

    கடலில் வீசி விட்டால் குழந்தை கடல் அலையில் சிக்கி இறந்து விட்டதாக நாடகமாடி விடலாம் என்று நினைத்து திட்டத்தை தீட்டினேன். ஆனால் எனது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை ஜோகன் ரிஷியின் நகைகளை அடகு வைக்க தனியார் வங்கிக்கு சென்றேன். அப்போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் கைது செய்யப்பட்ட பாத்திமாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது கணவர் சரோபினிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாத்திமா மீது ஏற்கனவே நகை மோசடி வழக்கு ஒன்று உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் கடன் பெற்றுள்ளார். இது தொடர்பாக நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×