
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள உள்ளியக்குடியை சேர்ந்தவர் காசிநாதன்(வயது 70). அதே ஊரைச் சேர்ந்தவர் சிங்காரம்(60). கூலித்தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மாக்காயிகுளம் கிராமத்தை சேர்ந்த மர வியாபாரியான மருதமுத்து என்பவரது வீட்டில் தங்கி மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு நேற்று முன்தினம் இரவு காசிநாதனும், சிங்காரமும் குடிபோதையில் இருந்ததாகவும், அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் கீழே விழுந்த காசிநாதனுக்கு தலையின் பின்பகுதியில் அடிபட்டு மூக்கு வழியாக ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காசிநாதனை மீட்டு சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர் இல்லாததால் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, காசிநாதன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரஞ்சனா விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து சிங்காரத்தை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.