
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் அஜித்குமார் (வயது 24).
அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கண்டமங்கலம் அருகே உள்ள ரஜபுத்திரபாளையத்தில் தங்கி அங்கு உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் அஜித்குமார் ஜே.சி.பி. ஆப்ரேட்டராகவும் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அஜித்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வேலை நிமித்தமாக கலித்திராம்பட்டு கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அஜித்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அஜித்குமார் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரியூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அஜித்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து குறித்து மூர்த்தி கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.